சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மும்பை கேம்ப கோலா குடியிருப்பை காலி செய்ய, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு மே 31 வரை கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு மும்பையில் கேம்ப கோலா வளாகத்தில் 6 மாடிக் கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் 6-க்கும் அதிகமான மாடிகளுடன் 1981-89 ஆம் ஆண்டுகளில் இக்குடியிருப்புக் கட்டப்பட்டது. மொத்தமுள்ள 7 கட்டிடங்களில் இரு கட்டிடங்கள், 20 மற்றும் 17 மாடிக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டுள்ளன.
விதிமுறை மீறிக் கட்டப்பட்ட இக்கட்டிடங்களை இடிக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. கட்டுமான நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராடி வந்தனர்.
கடந்த அக்டோபர் முதல் தேதி நடைபெற்ற இது தொடர்பான வழக்கில், அக்குடியிருப்பை சட்ட விரோதக் குடியிருப்புகள் என உச்ச நீதிமன்ற நீதிபதி சிங்வி அறிவித்தார். மேலும், நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விதிமுறை மீறப்பட்ட 102 வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றி அக்கட்டடங்களை இடிக்கவும் உத்தரவிட்டார்.
குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்தது. மேலும், போலீஸார் உதவியுடன் புல்டோசர் மூலம் சுற்றுச்சுவரை இடிக்கத் தொடங்கியது. இதனிடையே இப்பிரச்சனையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அக்குடியிருப்பை இடிக்கத் தற்காலிகத் தடை விதித்தது.
இது தொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, மும்பை கேம்ப கோலா குடியிருப்பை காலி செய்ய, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு மே 31 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.