இந்தியா

நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுக்குப் பிறகு உத்தராகண்டில் பஸ் வசதி பெற்ற கிராமம்

செய்திப்பிரிவு

நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆனபோதிலும், பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஒரு கிராம மக்களுக்கு நேற்றுதான் விடிவுகாலம் பிறந்தது.

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள சில்பட்டா கிராமம் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை. இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க நீண்ட தூரம் நடந்தே செல்ல வேண்டி இருந்தது.

இதையடுத்து சாலை வசதி செய்து தர வலியுறுத்தி சில்பட்டா கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில், பிரதமரின் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தாலுகா அலுவலகம் அமைந்துள்ள ஆதி பத்ரி நகரை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.

21 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த புதிய சாலையில் மாநில போக்குவரத்துக்கழகம் சார்பில் நேற்று பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் 69 ஆண்டுகளாக நீடித்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

முதல் முதலாக தங்கள் கிராமத்துக்கு வந்த பஸ்ஸை, சில்பட்டா கிராம மக்கள் உற்சாகமாக கூடி நின்று வர வேற்றனர். அப்போது பெண்கள் பாரம்பரிய நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தங்கள் பகுதிக்கு சாலை வசதி கிடைக்க உறுதுணையாக இருந்த கரன்பிரயாக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அனுசுயா பிரசாத் மைகுரிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து சில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த கலாம் சிங் பிஷ்ட் கூறும்போது, “நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே எங்கள் கிராமத்துக்கு அரசு சாலை வசதி செய்து தரும் என்று நம்பி இருந்தோம்.

தாமதமானாலும், எங்கள் வாழ்நாளிலேயே சாலை அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் நாங்கள் பட்ட கஷ்டங்களை வருங்கால சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது” என்றார்.

இதுகுறித்து ஒரு கிராமவாசி கூறும்போது, “எங்கள் பகுதியில் உள்ள பல குக்கிராமங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சாலை வசதி கிடைத்துவிட்டது. ஆனால், எங்கள் கிராமத்துக்கு மட்டும் சாலை வசதி கிடைப்பதில் தேவையில்லாமல் தாமதம் ஏற்பட்டது. இதற்காக நாங்கள் பல தடவை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம்” என்றார்.

இந்த சாலை திட்டத்தின் செயல் பொறியாளர் பி.எஸ்.ராவத் கூறும்போது, “சாலை அமைக்கும் பணி தேவையின்றி தாமதமானதாகக் கூறுவது தவறு. மலைப்பாங்கான இப்பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு 18 மாதங்களில் சாலை அமைத்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT