இந்தியா

ஒடிசாவில் 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றியதாக தலைமை ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு மாணவியுடன் தலைமறைவான ஒடிசாவைச் சேர்ந்த 55 வயது பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தில் உள்ளது சண்டகா கிராமம், அங்குள்ள உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபர்தன் பரிடா. அவர் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது?

கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் கலந்துகொள்ள பள்ளிக்கு வந்துள்ளார் மாணவி. தேர்வுக்குப் பிறகு விடுதிக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை.

மார்ச் 17-ம் தேதி அன்று அவர், தலைமை ஆசிரியருடன் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையின் தேடுதலுக்குப் பிறகு தலைமை ஆசிரியர் மற்றும் மாணவி இருக்குமிடம் தெரிய வந்தது.

கோராபுட் மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி ராஜஸ்ரீ தாஸ், ''பாதிக்கப்பட்ட மாணவி மீட்கப்பட்டு, மாநில குழந்தைகள் பாதுகாப்பு நல வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்'' என்றார்.

தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

SCROLL FOR NEXT