இந்தியா

என்.எஸ்.ஜி. கூட்ட அறையில் இந்தியா இல்லை; என்ன நடந்ததென்று தெரியவில்லை: வி.கே.சிங் பரபரப்பு

செய்திப்பிரிவு

அணுசக்தி விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராகும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து அன்று என்.எஸ்.ஜி. கூட்டம் நடந்த அறையில் இந்திய அதிகாரிகள் ஒருவரும் இல்லை என்றும் என்ன நடந்ததென்று தெரியாது என்றும் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

உ.பி. மாநில பல்லியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த வி,கே.சிங் கூறியதாவது:

என்.எஸ்.ஜி. கூட்டம் மூடப்பட்ட அறையில் நடந்தது. அறைக்குள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் தெரியாது, எனவே எல்லாமே ஊகங்கள்தான். யார் யாரிடம் என்ன கூறினார்கள், அங்கு என்ன கூறப்பட்டது என்பது பற்றிய ஹேஷ்யங்களே வந்துள்ளன. அறையில் உள்ளே இருந்தவர்களுக்கு மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும். எங்களுக்கு எதுவும் தெரியாது, என்றார்

ஆனால் அன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதற்கும் இதற்கும் பெரிய இடைவெளி, முரண்பாடு உள்ளது. அன்று வெளியுறவு அமைச்சகம் என்.எஸ்.ஜி கூட்டம் பற்றி விரிவாக அறிக்கை அளித்தது, ஒரே நாடு, அது சீனாதான் இந்தியா உறுப்பினராக தடையாக உள்ளது என்று குற்றம்சாட்டியது. விகாஸ் ஸ்வரூப் ‘நிச்சயமாக’ தான் கூறுவதாக கூறிய போது சீனாதான் நடைமுறை சிக்கல்களை எழுப்பி இந்தியாவின் உறுப்பினர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது என்று திட்டவட்டமாகக் கூறினார், ஆனால் இன்றோ வி.கே.சிங் ‘அறையிலிருந்தவர்களுக்குத்தான் தெரியும், எங்களுக்குத் தெரியாது’ என்கிறார்.

மேலும் வி.கே.சிங்கிடம் சீனா எதனால் எதிர்க்கிறது என்று கேட்ட போது, “நீங்கள்தான் அப்படி கூறுகிறீர்கள். எனக்கு அது பற்றி தெரியவில்லை. அதனால்தான் நான் கூறுகிறேன், ஊடகங்கள் இது பற்றி ஒன்றை எழுதுகிறது என்றால் அது எங்கிருந்து முளைக்கிறது என்று நான் கேட்கிறேன். நீங்களாகவே ஒன்றை முடிவு செய்து எழுதி விடுவீர்களா? அல்லது மத்திய வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்ததா? தெரிவிக்கவில்லை.. சரியா? ஏனெனில் 48 நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்ட அறையில் நாங்கள் இல்லை. அங்கு என்ன விவாதிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. வெளியிலிருப்பவர்களுக்கு உள்ளே நடந்தது பற்றி என்ன தெரியும்?” என்றார்.

சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று பிரதமர் மோடி கூறியதையடுத்து வி.கே.சிங் தற்போது இவ்வாறு கூறியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

SCROLL FOR NEXT