நாடாளுமன்றத்தில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
1 லட்சம் பேருக்கு 137 போலீஸ்
மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர்: ஒரு லட்சம் மக்களைப் பாதுகாப்பதற்கு 137 போலீஸார் என்ற விகிதாசாரம் தற்போது நாடு முழுவதும் நிலவுகிறது. மத்திய படையின் கீழ் 298 விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் 26 பேருக்கு இசட் பிளஸ் பிரிவும், 58 பேருக்கு இசட் பிரிவும், 144 பேருக்கு ஒய் பிளஸ் பிரிவும், 2 பேருக்கு ஒய் பிரிவும், 68 பேருக்கு எக்ஸ் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் இசட் பிளஸ் பிரிவில் உள்ள 14 பேருக்கு தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) கறுப்புப் படை கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக என்எஸ்ஜி 551 வீரர்களைக் களம் இறக்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுத்த பின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத சம்பவங்கள் 25 சதவீதம் வரை குறைந்துள்ளன.
400 குண்டுவெடிப்பு சம்பவங்கள்
மத்திய அமைச்சர் கங்காராம் அஹிர்: கடந்த ஆண்டு நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். 479 பேர் படுகாயமடைந்தனர். தேசிய பாதுகாப்பு படையின், தேசிய குண்டு வெடிப்பு தகவல் மையத்திடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.