காற்றில் மாசின் அளவு மற்றும் இதனால் ஏற்படும் அகால மரணங்கள் ஆகியவற்றில் சீனாவை இந்தியா முந்திவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதார ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
காற்றில் மாசடைதலில் இந்தியா உலகின் மிக மோசமான நிலையில் உள்ளது, காற்றில் கலந்துள்ள மாசு நுண் துகள்களின் அளவு அபாயகட்டத்தில் இருப்பதாகவும் இதனால் ஆண்டொன்றுக்கு 11 லட்சம் பேர் அகால மரணமெய்துவதாகவும் இந்த சுகாதார அறிக்கை எச்சரித்துள்ளது.
சீனா இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் அங்கு காற்று மாசு மரணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களில் காற்றின் மாசு அளவு அதிகமாகியுள்ளது.
1990-2015-க்கு இடையே காற்றில் பிஎம்.2.5 என்ற மாசு நுண் துகள்கள் அதிகரிப்பினால் அகால மரணங்கள் 50% அதிகரித்துள்ளது.
காற்றில் மிதக்கும் இந்த மாசு நுண் துகள்கள் நுரையீரலின் அடியாழத்தில் சென்று தேங்குகிறது. இதனால்தான் நுரையீரல் புற்று நோய், நீண்ட நாளைய மூச்சுக்குழல் அழற்சி, மற்றும் இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.
“பிஎம்.2.5 என்ற மோசமான காற்று நுண் துகள்களின் அளவுக்கதிகமான இருப்பினால் உண்டாகும் மரணத்தில் தற்போது இந்தியா சீனாவை நெருங்கியுள்ளது. உலக அளவில் ஏற்படும் மரணங்களில் காற்றின் மாசு காரணமாக ஏற்படும் மரண விகிதம் 50% சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுகிறது” என்கிறது இந்த சுகாதார அறிக்கை.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடுமையான பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எரிசக்திக்காக நிலக்கரியை எரிப்பதும், புதிய பயிர்களுக்காக நிலங்கள் எரிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது என்கிறது இந்த அறிக்கை.
அண்டை நாடான வங்கதேசத்திலும் 2010 முதல் காற்றில் மாசடைதல் அதிகரித்துள்ளது.
புதுடெல்லியில் கடந்த நவம்பர் மாதம் சுகாதார அவசர நிலையே பிறப்பிக்கப்பட்டது. காரணம் காற்றில் மாசு நுண் துகள் பிஎம்2.5-ன் இருப்பு அபாயகட்டத்தையும் தாண்டியது என்பதே.