வங்கியின் லாபத்தை ஊதிய உயர்வுக்காக மட்டும் செலவிட முடியாது என்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து துரதிருஷ்டவசமானது என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த 2 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், “வங்கிகளின் லாபம் மற்றும் வருமானத்தைப் பிற பணிகளுக் காகவும் செலவிட வேண்டும். கூடுதல் ஊதிய உயர்வுக்காக மட்டும் அவற்றைச் செலவிட முடியாது என்பதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச் வெங்கடாசலம்
செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கியின் வருமானத்தையும், லாபத்தையும் ஊதிய உயர்வுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை அல்ல. நாங்கள் நியாயமான ஊதிய உயர்வைத்தான் கேட்கி றோம். அதுவும் வங்கிகள் நல்ல லாபமீட்டிக் கொண்டிருப் பதால்தான். வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மறுப்பதற்குப் பதிலாக, பெருநிறுவனங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளன. அவற்றை வசூலிப்பதில் கடுமை காட்ட அரசு முன்வர வேண்டும்.
வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை சிதம்பரம் நிராகரித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. எங்களின் மீது வேலைநிறுத்தப் போராட்டம் திணிக்கப்பட்டது. போராட்டத்தால் மக்களுக்காக ஏற்பட்ட அசௌகரியத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், எங்களின் கோரிக்கையை சிரத்தையுடன் அரசும் வங்கி நிர்வாகமும் செவிமடுக்காததால், போராட்டம் தவிர்க்க முடியாததானது என்றார் அவர்.