அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 47.
அருணாச்சல் தலைநகர் இடாநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முதல்வர் பதவியும் உச்ச நீதிமன்ற உத்தரவும்..
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இது நடந்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் சிலர் ஆதரவுடன் அம்மாநில முதல்வராக கலிக்கோ புல் பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், இதனை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம் கலிக்கோ புல் பதவியேற்பு செல்லாது என அறிவித்தது.
கலிக்கோ புல்லின் ஆட்சி சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கலிக்கோ புல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
ஆட்சி பறிபோனதால் இவர் தொடர்ந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.