காஷ்மீர் மக்கள் மீது சிறிதளவேனும் அக்கறை இருந்தால் அங்குள்ள இளைஞர்களை வன்முறைக்கு தூண்டாதீர் என பாகிஸ்தானுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்திதார் மெகபூபா முப்தி.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் கவலை கொண்டுள்ளார். மாநிலத்தில் இனியாவது ரத்து சிந்துவது நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறார். காஷ்மீர் கொந்தளிப்பு அடங்க வேண்டும் என நினைக்கிறார்.
பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அழைக்கும் தைரியமான ஒரு முடிவை எடுத்தவர் நம் பிரதமர். அதேபோல் லாகூருக்கு அதிரடி பயணம் மேற்கொண்டார்.
ஆனால், இவற்றிற்கெல்லாம் பாகிஸ்தான் எப்படி பதிலளிக்கிறது? பதான்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீர் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது.
அதேபோல், காஷ்மீர் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தானுக்குச் சென்ற நமது உள்துறை அமைச்சரை ஒரு விருந்தினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையைக் கூட புறக்கணித்தது.
காஷ்மீர் மக்கள் மீது சிறிதளவேனும் அக்கறை இருக்குமானால் அங்குள்ள இளைஞர்களை பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடாமல் இருக்கட்டும். அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே இளைஞர்கள் படைகளுக்கு எதிராக கையில் கற்களை ஏந்துகின்றனர். காவல் நிலையங்கள், மத்திய படையினரை தாக்கும் இளைஞர்கள் பதில் தாக்குதலில் பலியாகின்றனர்.
காஷ்மீரில் தற்போது அமைந்துள்ள பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி வாஜ்பாயின் காஷ்மீர் கொள்கையின்படி அமைந்திருக்கிறது. முன்னாள் முதல்வரும், எனது தந்தையுமான முப்தி முகமது சயீது, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டை ஆளும் பிரதமர் 3-ல் இரண்டு பங்கு பெரும்பாண்மை கொண்டவராக இருக்க வேண்டும் எனக் கூறுவார்.
எனவே, காஷ்மீர் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி நிரந்தர தீர்வு காண்பார் என நம்புகிறேன். மோடி தலைமையிலான ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் இனி எப்போதுமே தீர்வு ஏற்படாது.
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தனிநபர்கள் கொண்ட ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு அமைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என உயர்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்" என்றார்.