காஷ்மீர் எல்லையில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே, 11வது நாளாக இன்று அதிகாலை வரை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 2 பயங்கரவாதிகள் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 24ம் தேதியன்று, இந்திய எல்லைப் பகுதியில் கிரண் செக்டார் வழியாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் ஆதரேவாடு பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ தொடங்கினர்.
இது தொடர்பாக இந்திய ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் அண்மையில் அளித்த பேட்டியில்: சுமார் 30 பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ராணுவம் ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டினை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிரண் செக்டாரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே நேற்று இரவு தொடங்கி தொடர்ந்து இன்று அதிகாலை வரை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை 5 காவலர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.