இந்தியா

இந்திய விமானப் படையில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதில் மெத்தனம்: விமானப் படை தளபதி வருத்தம்

பிடிஐ

விமானப் படையில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுவதாக விமானப் படைத் தளபதி அரூப் ரஹா கவலை தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படையின் 82வது ஆண்டுவிழா வரும் 8ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திட்டமிட்டதற்கு மாறாக ஒவ்வொரு மேம்பாட்டுப் பணிகளும் காலம் தாழ்த்தப் படுகின்றன. எனினும், மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசு இந்நிலையைச் சரியாக்கும் என்று நம்புகிறோம். நம்மிடம் உள்ள சில வசதிகள் தங்களின் ஆயுட்காலத்தை நெருங் கும் தருவாயில் உள்ளன. ‘மீடியம் மல்டி ரோல் காம்பேட் ஏர்கிராஃப்ட்' மற்றும் ‘லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட்' போன்ற வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந் நிலையைச் சமாளிக்க முடியும்.

‘இந்திய விமானப் படை எனது விமானப் படை அல்ல. அது இந்தியாவின் விமானப் படை' என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். எங்களுக்குத் தேவையான வசதிகளை அரசு உடனடியாகக் கிடைக்கச் செய்ய‌ வேண்டும். ஆனால் அந்த வசதிகள் சரியான நேரத்துக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது. எனினும், புதிய அரசு எங்களின் நிலையைப் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம். அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் மீளாய்வு செய்கிறார்கள். பதிலளிக் கும் பொறுப்பு எங்களுக்குக் கூடியுள்ளது.

இதுதொடர்பாக முப்படைகளின் தளபதிகளும் ஒவ்வொரு மாதமும் பிரதமரை நேரில் சந்தித்து உரையாட இருக்கிறோம்" என்றார்.

சீன‌ ஊடுருவலின் மர்மம்

இதற்கிடையே, இந்திய எல்லையில் சீன ஊடுருவல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அரூப் ரஹா, "இந்தியாவுக்கு சீன அதிபரின் வருகையும் இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலும் மர்மமாக உள்ளன.

ஒவ்வொரு முறை சீனாவைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போதும் இப்படிப்பட்ட ஊடுருவல்கள் நடந்திருக்கின்றன. ராஜதந்திரத்தின்போது குறியீடுகள் மூலமாக வெவ்வேறு விஷயங்கள் உணர்த்தப்படும். எனினும், இந்திய எல்லையில் அந்நியர்கள் எவரும் அனுமதியில்லாமல் கால் பதித்துவிட முடியாது.

பிரச்னைக்குரிய லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் விமானப்படைத் தளம் அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் அந்தத் திட்டம் நிறைவடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம். தவிர, கார்கில் பகுதியிலும் அப்படி ஒரு தளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிதி விரைவில் வழங்கப்படும், என்றார்.

SCROLL FOR NEXT