பிரிட்டனைச் சேர்ந்த பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து, ராணுவத்துக்கு தேவையான 145 பீரங்கிகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தினர் கூறும் போது, “எம்777 அல்ட்ரா லைட் வெய்ட் ஹோவிட்சர் பீரங்கிகளை பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்திட மிருந்து வாங்க ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதற்கு ராணுவ தளவாட கொள்முதல் அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. 145 பீரங்கிகள் அடங்கிய இந்த ஒப்பந்தத் தின் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி. இதில் 120 பீரங்கிகள் இந்தியாவில் பொருத்தப்படும் (அசம்பிள்)” என்றார்.
ஆனால், உள்நாட்டில் தொழில் துறையை ஊக்கப்படுத்து வதற்காக, வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ள ஹோவிட்சர் பீரங்கிகளை பொருத்துவதற்கான தொழிற்சாலையை நிறுவ, இந்திய நிறுவனமான மஹிந்திரா குழுமத்தை தேர்வு செய்துள்ளதாக பிஏஇ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்திடமிருந்து பீரங்கி களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.