தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் நேற்று கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடுமாறு கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டது. இதைக் கண்டித்து பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் நிகழ்ந்த வன் முறையில் 200-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீயிட்டு கொளுத் தப்பட்டன. இதைத் தடுக்க போலீ ஸார் நடத்திய துப்பாகிச் சூட்டில் இருவர் பலியாகினர்.
கடந்த இரு தினங்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்பிய நிலையில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப் பட்டது. அதே வேளையில் பெங்க ளூருவில் மட்டும் வரும் 25-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணை களிலும், மைசூரு, மண்டியாவில் சில இடங்களிலும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக பாதுகாப்பு போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையி னர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கன்னட அமைப்பு கள் கூட்டமைப்பின் சார்பாக நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரு, மண்டியா, மைசூரு, ஹூப்ளி, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிஆர்பிஎப், துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது அவர் களை தடுத்த போலீஸார், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அப்போது வாட்டாள் நாகராஜ் கூறும்போது, “கர்நாடக மக்களின் நலனுக்காக போராடும் கன்னட அமைப்பினரை ஒடுக்க அரசு முயற்சிக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் தடியடி நடத்துவது கண்டிக்கத்தக்கது. என்னைக்கூட இரு போலீஸார் தாக்கினர். தமிழகத்துக்கு செல்லும் நீரை நிறுத்தும் வரை எங்களின் போராட்டம் தொடரும். காவிரி வழக்கில் கைதான அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடில் மீண்டும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
இதேபோல பெங்களூரு கன்டோன்மெண்ட், கிருஷ்ணராஜ புரம், மண்டியா, மைசூரு, ஷிமோகா, ஹாசன், ஹூப்ளி ஆகிய இடங் களிலும் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். ராம்நகர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்்ஷன வேதிகே அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தில் கைதான 500-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கன்னட அமைப்பினரின் தொடர் போராட்டம் காரணமாக கர்நாடகா- தமிழகம் இடையேயான போக்குவரத்து தொடர்ந்து நேற்றும் பாதிக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களும் கர்நாடகாவில் திரையிடப்படவில்லை.