நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இந்தத் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நாடு முழுவதும் கடந்த மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். ஜூன் 8-ல் தேர்வு முடிவை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “நீட் தேர்வு பல மொழிகளில் நடை பெற்றன. இதில் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படவில்லை, ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இருந்தன.
எனவே, நீட் தேர்வு முடிவை வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் இந்தத் தேர்வை செல்லாது என்று அறிவித்து, ஒரே மாதிரியான வினாத்தாள்களைக் கொண்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மே 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், “நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். நீட் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங் கூறும்போது, “நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக உள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் கூறும் போது, “மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அட்டவணையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிர்ணயம் செய்துள் ளது. இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் என்ப தால், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிடலாம். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிர்ணயித்த கால அட்டவணைப்படி கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை நடத்த லாம். அதேநேரம் தேர்வு முடிவு, கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நடைமுறைகள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். மேலும் நீட் தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் இனி பரிசீலிக்க வேண்டாம்” என்றனர்.
மேலும் இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தர விட்டனர்.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.