இந்தியா

காஷ்மீர் மீட்புப் பணிகள்: மக்கள் கொந்தளிப்புக்கு ஒமர் அப்துல்லா விளக்கம்

செய்திப்பிரிவு

"ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மிக மிக மோசமானது. எதிர்பாராத இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வெள்ளப் பேரிடரை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஒமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மீட்புப் பணியில் அரசு நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பேரழிவு என கூறியுள்ளார் ஒமர்.

காஷ்மீர் அரசு பேரிடரை சமாளிக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவது தொடர்பான கேள்விக்கு, "காஷ்மீர் மக்கள் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் அபாய சூழலில் இருந்து மீட்கப்பட்டு பத்திரமாக எங்கோ தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அந்த வகையில், மக்கள் பத்திரமாக இருப்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இது ஒரு எதிர்பாராத பேரிடர். தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மட்டுமே தலையாய பிரச்சினை. பொது மக்களை மீட்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் கடற்படையினருடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ஒமர் வெள்ளம் வடிந்த பின்னர் தொற்று நோய்கள் பரவுவதை தடுப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் வந்த பிறகே மாநில அரசு வெள்ளப் பிரச்சினையை கண்டு கொண்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒமர், "பிரதமர் வருவதற்கு முன்னரே வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு தொடங்கிவிட்டது. பிரதமர் வந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது.

ஆனால், அதன் பிறகுதான் ஜீலம் நதி பெருக்கெடுத்து வெள்ளம் புகுந்தது. பிரதமர் ஒன்றும் காஷ்மீரில் இந்த அளவுக்கு இயற்கை பேரிடர் வரும் என ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டு வரவில்லை" என்றார்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்

முன்னதாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.

SCROLL FOR NEXT