இந்தியா

அஜித் ஜோகி விலகலால் எந்த பாதிப்பும் இல்லை: காங்கிரஸ் கட்சி கருத்து

பிடிஐ

அஜித் ஜோகி விலகி புதிய கட்சி தொடங்குவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்த பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்த பிரச்சினையாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியும், குருதாஸ் காமத்தும் நேற்று முன் தினம் கட்சியில் இருந்து விலகினர்.

மேலும் புதிய கட்சித் தொடங்கப் போவதாக அஜித் ஜோகியும், முழுநேர அரசியலுக்கு முழுக்கு போடுவதாக குருதாஸ் காமத்தும் அறிவித்தனர். இதனால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்டது.

இந்நிலையில் அஜித் ஜோகியின் விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

அஜித் ஜோகி புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் மற்றும் பழங்குடியின பிரிவு தலைவர் பதவியை தாமாகவே உதறிவிட்டார். இதன் மூலம் கட்சி அவரை விலக்கி வைப்பதில் இருந்தும் தற்காத்து கொண்டார். ஒருவகையில் அவர் காங்கிரஸை விட்டு விலகியதே நல்லது தான். கடந்த 2000-ல் மத்தியப் பிரசேத்தில் இருந்து சத்தீஸ்கர் புதிய மாநிலமாக உருவானபோது அதன் முதல் முதல்வராக அஜித் ஜோகியை அமரவைத்து காங்கிரஸ் அழகு பார்த்தது. சீர்த்திருத்தத்துக்கான நீண்ட கயிறையும் அவரிடம் வழங்கியது. ஆனால் எதிர்மறையான குணத்தால் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளாமல் நழுவவிட்டார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அவரது பெயரை கட்சி முன்மொழியாத காரணத்தினால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வகையில் காங்கிரஸின் வளர்ச்சியை தடுத்தவர் தான் அஜித் ஜோகி. அவரால் தான் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 0.77 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. எனவே அவரது விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு பி.கே.ஹரிபிரசாத் கூறினார்.

SCROLL FOR NEXT