கர்நாடகத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்த தனித் தமிழர் சேனை அமைப்பின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான தேவதாஸ் (எ) இறையடியான் (53) சனிக்கிழமை காலமானார். அவரது உடல் தகனம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.
காவிரி பிரச்சினையால் ஏற்பட்ட கலவரம், சந்தன கடத்தல் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் தேவதாஸ்.
கர்நாடகத் தமிழர் மட்டுமின்றி தமிழ்நாட்டு மற்றும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். கடந்த 2 நாள்களுக்கு முன் தில்லையாடி வள்ளியம்மையின் பிறந்த நாளை கொண்டாடினார்.
கடந்த 3 மாதங்களாக தேவதாஸ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பெங்களூரில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு புலவர் மகிபை பாவிசைக்கோ, அறிஞர் குணா, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக 'தி இந்து'விடம் புலவர் மகிபை பாவிசைக்கோ கூறுகையில், “சிறு வயது முதலே தமிழர் நலனுக்கு குரல் கொடுத்து வருபவர் தேவதாஸ். அவரது மறைவு ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு” என்றார்.