மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சி அருகே நேற்று தடம் புரண்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் கேரளாவில் நேற்று ரயில் போக்கு வரத்து வெகுவாக பாதிக்கப் பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து, மங்களூரு நோக்கி புறப்பட்ட மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் (16347), நேற்று அதிகாலை 2.55 மணிக்கு கொச்சி அருகே அலுவா ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
பலத்த மழை பெய்து கொண் டிருந்த சமயத்தில், கருகுட்டி என்ற இடத்தில் திடீரென ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மெதுவாக சென்றதால், தடம் புரண்ட பெட்டிகள் கழன்று விடவோ, கவிழ்ந்துவிடவோ இல்லை. இதனால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
‘ஒரேயொரு பெண் பயணி மட்டும், தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாக புகார் தெரிவித்தார். அவருக்கு முதலுதவி வழங்கப் பட்டது. மற்றபடி யாருக்கும் பாதிப் பில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக, திரிச்சூர் அழைத்து செல்லப்பட்டு, பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது’ என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்ட சமயத் தில், எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை-திருவனந்தபுரம் ரயிலை, உரிய நேரத்தில் ஊழியர்கள் உஷார் படுத்தி, 300 மீட்டருக்கு அப்பால் நிறுத்திவிட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளில் இது மிக முக்கிய சாதனை என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இச்சம்பவத்தால் நேற்று எர்ணாகுளம் திரிச்சூர் தடத்தில் செல்ல வேண்டிய 21 ரயில் களின் சேவை ரத்து செய்யப்பட் டது. எழும்பூர்-குருவாயூர் எக்ஸ் பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் எர்ணா குளத்துடன் நிறுத்தப்பட்டன. மேலும் சில நீண்ட தூர ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ், கன்னியா குமரி-பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 ரயில்கள், திருநெல்வேலி வழியாக திருப்பி விடப்பட்டன.