ஒரு பதவியில் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளை இனி குறைந்தபட்சம் 2 ஆண்டுக ளுக்குள் பணியிட மாற்றம் செய்ய முடியாது.
இதுதொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அதேநேரம், தேவைப்படு மானால் குடிமைப் பணிகள் வாரியத்தின் பரிந்துரைப்படி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய அந்த விதிமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட் டுள்ள அந்த விதிமுறையில், "ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அனைத்து நியம னங்களும் குடிமைப் பணிகள் வாரியத்தின் பரிந்துரை அடிப்படை யிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி, மாநில அரசுகள் தலைமைச் செயலாளர் தலைமையில் குடிமைப் பணிகள் வாரியத்தை கட்டாயம் அமைக்க வேண்டும். மூத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது வருவாய் வாரிய தலைவர் அல்லது நிதி ஆணையர் அல்லது மாநில அரசின் பணியாளர் நலத் துறை செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளருக்கு இணையான ஒருவர் வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருப்பார். இவர் ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் மற்றும் மாறுதல் தொடர்பான பணிகளை கவனிப்பார்.
இதுபோல உள்துறை முதன்மைச் செயலாளர் அல்லது செயலாளர் மற்றும் மாநில காவல் துறை தலைவர் ஆகிய 2 பேர் வாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி நியமனம் மற்றும் மாறுதல் தொடர்பான பணிகளை கவனிப்பர்.
வனத்துறை முதன்மைச் செயலாளர் அல்லது செயலாளர் மற்றும் மாநில வனப் பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆகிய 2 பேர் வாரியத்தின் கூடுதல் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் ஐஎப்எஸ் பணி நியமனம் மற்றும் மாறுதல் தொடர்பான பணிகளை கவனிப்பர்.
ஒரு பதவியில் நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அதே பதவியில் நீடிக்க வேண்டும். அப்படியில்லை எனில், அவர் பதவி உயர்வு மூலம் வேறு பதவிக்கு செல்லலாம் அல்லது பணியிலிருந்து ஓய்வு பெறலாம் அல்லது குறிப்பிட்ட பணிக்காக வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது பயிற்சிக்காக அனுப்பி வைக்கலாம் என புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்கள் ஏதுமின்றி ஒரு பதவியில் உள்ள அதிகாரியை பணியிட மாற்றம் செய்வதற்கு குடிமைப் பணிகள் வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை மாநில அரசுகள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்வதாக புகார் எழுந்த நிலையில், இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட் டுள்ளது.
தீர்ப்பாய தலைவர்களுக்கு ஒரே மாதிரி பதவிக் காலம், ஊதியம்:
பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஊதியம் மற்றும் ஓய்வுபெறும் வயது ஆகியவற்றை ஒரே மாதிரி நிர்ணயிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இவர்களின் ஓய்வு வயது வேறுபடுகிறது. இந்தப் பதவியில் அமர்த்தப்படுபவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தால் 70 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தால் 67 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உறுப்பினராக நியமிக்கப்படுபவர் நிர்வாக தரப்பைச் சேர்ந்தவராக இருந்தால் ஓய்வு வயது 65 ஆக இருக்கும்.
தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படுவோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தால் அவரது சம்பளம் மாதத்துக்கு ரூ.90 ஆயிரமாகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ மத்திய அரசு செயலாளராகவோ இருந்தால் ரூ.80 ஆயிரமாகவும் இருக்கும்.