இந்தியா

குடியரசுத் தலைவர் உரையை பரிசீலிப்போம்- ஆம் ஆத்மி கருத்து

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையை கவனமாக பரிசீலிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது பற்றி கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் கூறியதாவது: நாட்டின் முதல் குடிமகன் என்ற முறையில், அவர் சொன்னவற்றை பற்றி கருத்து கூற விரும்பவில்லை. எங்களைப் பற்றி அவர் ஏதாவது சொல்லி இருந்தால் அவற்றை கவனமாக கருத்தில்கொண்டு பரிசீலிப்போம் என்றார்.

அறப் பணிகளுக்காக பழைய பொருள்களை விற்று நிதி திரட்டும் வேலை செய்வதல்ல அரசாங்கம் என்பது. ஜனரஞ்சக அராஜகம் செய்வதும் ஆட்சி நிர்வாகமாகாது. பொய் வாக்குறுதிகள் தருவது மக்களிடம் ஏமாற்றத்தையே தரும். அது கட்டுப்படுத்த முடியாத கோபமாக மாறி ஆட்சியில் உள்ளவர்களைத்தான் குறிவைக்கும் என்று குடியரசு தினத்தையொட்டி, சனிக்கிழமை ஆற்றிய உரையில் பிரணாப் தெரிவித்திருந்தார்.

உரையை அடுத்து கருத்து கூறிய ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ், குடியரசுத் தலைவர் குறிப்பிடுவது ஆம் ஆத்மி பற்றி அல்ல என்றார்.

அராஜகம் பற்றி பிரணாப் சொன்னது தேசம் முழுமையையும் கருத்தில் கொண்டே ஆகும். குஜராத், பஞ்சாப் உள்பட நாடு முழுவதையு் கவனத்தில் கொண்டுதான் பிரணாப் இவ்வாறு சொல்லி இருப்பார் என்றார் யாதவ்.

பிரணாப் உரை குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக கருத்து கூறவில்லை. ஆனால், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ட்விட்டரில் அனுப்பிய கருத்தை அப்படியே மறு ட்வீட் செய்தார் முதல்வர். கிளர்ந்தெழுவதும் அராஜகமும் ஒன்றல்ல. 1984ல் அரசாலும் காவல்துறையாலும் தூண்டிவிடப்பட்ட கும்பலால் சீக்கியர்கள் கொல்லப்பட்டனரே அதுதான் அராஜகம் என்று கபூர் தனது ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT