இந்தியா

ஆம் ஆத்மி கட்சி இரவு விருந்துக்கு ரூ.20 ஆயிரம் வசூல்: கேஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

இரா.வினோத்

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், தன்னுடன் இரவு உணவு சாப்பிடுபவர்களிடம் ரூ.20 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சம் வரை வசூலிக்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுதேவன் கர்நாடக தேர்தல் ஆணையத்தில் புதன் கிழமை அர்விந்த் கேஜ்ரிவால் மீது புகார் அளித்தார்.

இது தொடர்பாக அவர் 'தி இந்து' செய்தியாளரிடம் கூறியதாவது: ''பெங்களூரில் அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்த இரண்டு நாட்கள் இரவிலும் தன்னுடன் டின்னர் சாப்பிட்டவர்களிடம் இருந்து ரூ. 76.68 லட்சம் வசூலித்துள்ளார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது எவ்வாறு சட்டப்படி குற்றமோ, அதேபோல வாக்காளர்களிடம் இருந்து பணம் வாங்குவதும் குற்றம்.

அதோடு, இரவு உணவுக்காக கேஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் பணம், கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளது. கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் டின்னர் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை அர்விந்த் கேஜ்ரிவால் வசூலித்துக் கொண்டிருக்கிறார். இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

ஆம் ஆத்மியின் வளர்ச்சி நிதி வசூல் என்ற பெயரில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இரவு உணவு மூலம் வசூலித்த பணம் குறித்த விவரங்களை ஆம் ஆத்மி கட்சி உடனடியாக வெளியிட வேண்டும்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள் ளேன். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்” என்றார் வழக்கறிஞர் வாசுதேவன்.

SCROLL FOR NEXT