டெல்லி குடிநீர் வாரியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய 800 பணியாளர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திங்கள்கிழமை மாலை பிறப்பித்தார்.
இவர்கள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவது ஊழலுக்கு வழி வகுக்கும் என்று அரசு கருதியது. இதையடுத்து முறைப்படுத்துதல் நடவடிக்கையாக, டெல்லி மாநில நிர்வாகத்தில் இதுவரை மேற்கொள்ளப்படாத அளவில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வாரியத்தில் மொத்தம் 19,000 பணியாளர்கள் உள்ளனர்.
இதனிடையே டெல்லி குடிநீர் வாரியத்தின் முதன்மை குடிநீர் பகுப்பாய்வாளர் வினோத் குமார், பட்வாரி சுனில் குமார், மீட்டர் கணக்கீட்டாளர் அதுல் பிரகாஷ் ஆகிய மூவரும் கட்டிடம் கட்டுமானப் பணிக்கு தண்ணீர் தருவதற்கு லஞ்சம் கேட்பது போல், செய்தி சேனல் ஒன்று ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ செய்து ஒளிபரப்பியது.
இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவின்படி, இச்செய்தி வெளியான 1 மணி நேரத்தில் அந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பொதுப்பணித் துறை அமைச்சர் மணீஷ் சிசோதியா தெரிவித்தார்.
“இதுகுறித்து விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த மூவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் டெல்லி அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் நாங்கள் உறுதியான தகவலை கூறியுள்ளோம். லஞ்ச, ஊழல் நாள்கள் முடிந்துவிட்டன. இது தூய்மையான அரசியலுக்கான அரசாங்கம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் மணீஷ் சிசோதியா.