இந்தியா

ஜெயலலிதா ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை: சுப்பிரமணியன் சுவாமி திடீர் மனு தாக்கல்

இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இதற்கிடையே ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்காண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட‌து. இதனைத் தொடர்ந்து 4 பேரும் கடந்த 21 நாட்களாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதையடுத்து, தன‌க்கு ஜாமீன் வழங்கக்கோரியும் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

இந்த மனுவையும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தார்.

மூத்த வழக்கறிஞர்கள் வாதம்

இதனைத் தொடர்ந்து நால்வரின் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகின்றன. அப்போது ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பாக மூத்த வழக்கறிஞர் சுஷில் குமாரும் ஆஜராக உள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி மனு

இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதே போல தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, இவ்வழக்கில் அர‌சு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

SCROLL FOR NEXT