கருணை மனுக்கள் மீதான முடிவை கிடப்பில் போடுவது சரியாகாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 21-ன் படி மரண தண்டனை கைதிக்கும் சட்ட பாதுகாப்பு பெறும் உரிமை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்: "கருணை மனுக்களை ஏற்று மரண தண்டனையை ஆயுளாக குறைப்பதால், பெருங்குற்றங்கள் செய்தவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது என அர்த்தம் இல்லை. அதே வேளையில், கருணை மனுக்கள் மீது முடிவு செய்வதில் காரணமற்ற தாமதமும் கூடாது.
ஒரு மரண தண்டனை கைதிக்கு கருணை கோர உரிமை இருக்கிறது, அதை வழங்குவதா இல்லை நிராகரிப்பதா என்ற முடிவை எடுப்பது நீதிமன்றத்தின் அரசியல் சாசன கடமையாகும்.
கடந்த மாதம் 15 பேர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கப்பட்டு அளிக்கப்பட்ட தீர்ப்பின் பின்னனியில், கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலம் தாழ்த்தியதே காரணமாக இருந்தது. கருணை மனுக்களை நிராகரிக்க காலம் தாழ்த்தப்பட்டதால் 15 பேரில் இருவர் மனநலன் பாதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது போல் கருணை மனுக்களை நிராகரிக்கப்பட்டால் அந்த தகவல் உடனடியாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்". இவ்வாறு சதாசிவம் தெரிவித்தார்.