அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து 8 சதவீத வளர்ச்சி நீடித்தால் இந்தியா வல்லரசாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்தியில் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற உடன் mygov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் பொது மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றும் மோடி, பெரும்பாலும் இந்த இணையத்தில் இருந்தே முக்கிய கருத்துகளை எடுத்துப் பேசுகிறார்.
இணையதளத்தின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி பொதுமக்களுடன் நேற்று நேரடியாக கலந்துரையாடி னார். டெல்லி இந்திரா காந்தி உள் அரங்கத்தில் முதல் முறையாக நடந்த ‘டவுன் ஹால்’ நிகழ்ச்சி யில் 2000 பேர் பங்கேற்றனர். அவர் களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதில் வருமாறு:
குறைதீர்ப்பாய அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அந்த வகையில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சினை யும் கேட்டறியப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட வேண்டும். அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் தகுதியுள்ள மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லையெனில் அந்த திட்டங்கள் வீணாகிவிடும்.
உலகம் முழுவதும் பொருளா தார தேக்கநிலை நிலவுகிறது. இந்தியாவில் 2 ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டது. இருப்பினும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக நீடித்தால் உலகின் தலைசிறந்த நாடாக, வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.
விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த சவால்களை சமாளிக்க தொழில்நுட்பங்களும் ஸ்திரமான நல்லாட்சியும் அவசியம். ஒவ்வொரு விவசாயியும் தங்களது வேளாண் நில மண்ணின் தன்மையை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு, மண் வள அட்டை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வேளாண் பொருட்களை இணையதளம் மூலம் சந்தைப்படுத்த வேண்டும்.
நாட்டின் பொது சுகாதாரம் பலவீனமாக உள்ளது. நோய் வரும் முன்பே தடுப்பது குறித்து நம்மிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. சுத்தமான குடிநீர், சுகாதாரமான, ஊட்டமான உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவை தவிர குறைந்த செல வில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப் பதையும் உறுதி செய்ய வேண்டும். இதை கருத்திற் கொண்டே ஏழை கள் பயன் பெறும் வகையில் மருத் துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் முன்னேற வேண் டும். அதற்காக நாடு முழுவதும் 300 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை கிராமிய மணத்துடன் அதேநேரம் நகரங்களுக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
மக்கள் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகமே நல்லாட்சியின் அடையாளம். அதற்காகவே அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தங்களின் கருத்துகளை விருப்பு, வெறுப்பின்றி தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பலர் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளை மறைப்பதற்காக பசு பாதுகாப்பு என்ற பெயரில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கோபம் எழுகிறது. இதுதொடர்பாக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக பிளாஸ்டிக், குப்பை கழிவுகளை சாப்பிடுவதால் பசுக்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றன. உண்மையிலேயே பசுக்களை காப் பாற்ற வேண்டுமென்றால் பிளாஸ் டிக் கழிவுகளை திறந்தவெளியில் வீசுவதை நிறுத்த வேண்டும். அவற்றை பசுக்கள் சாப்பிடாமல் தடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பசு பாதுகாப்பு.
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். அந்த பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலகத்திற்கான செல்போன் செயலியை மோடி தொடங்கிவைத் தார். மேலும் mygov.in இணையதளம் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
டவுன் ஹால்: ஒபாமா வழியில் மோடி
‘டவுன் ஹால்’ என்பது ஆட்சியாளர்களும் பொதுமக்களும் நேருக்கு நேர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆகும். கடந்த 17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் இந்த நடைமுறை அறிமுகமானது.
அப்பகுதி ஆட்சியாளர்களும் பொதுமக்களும் பொது பட்ஜெட் குறித்து உள்ளூர் மைய மண்டபத்தில் (டவுன் ஹால்) ஒன்றுகூடி கலந்துரையாடினர். இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி அமெரிக்காவை தாண்டி உலக நாடுகள் முழுவதும் பிரபலமானது.
தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ‘டவுன் ஹால்’ கலந்துரையாடல்களில் அதிகம் பங்கேற்று வருகிறார். இதே அணுகுமுறையை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ‘டவுன்ஹால்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.