இந்தியா

மாயாவதியை கடும் வார்த்தைகளால் விமர்சித்த தயாசங்கர்சிங்கை மீண்டும் சேர்த்தது பாஜக

ஆர்.ஷபிமுன்னா

பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதியை தவறான வார்த்தைகளால் விமர்சித்த தயாசங்கர்சிங்கை, மீண்டும் கட்சியில் சேர்த்தது பாரதிய ஜனதா. இது அவரது மனைவி சுவாதிசிங் உ.பி. தேர்தலில் வென்றதை அடுத்து நடைபெற்றுள்ளது.

உ.பி. பாஜகவின் துணைத்தலைவராக இருந்தவர் தயாசங்கர்சிங். இவர், தேர்தலில் போட்டியிட தன் கட்சி வேட்பாளர்களிடம் மாயாவதி பணம் பெறுவது விபச்சாரிகளை விட கேவலமானது என கடும் வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். கடந்த ஜூலையில் செய்த தயாசங்கர் விமர்சனம் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதற்காக தயாசங்கர் உடனடியாக மன்னிப்பு கேட்ட பின்பும், அவருக்கு எதிராக நாடளுமன்றத்திலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பினர்.

உ.பி.யிலும் மாயாவதி கட்சியினர் தயாசங்கரை கைது செய்யக் கோரி ஆர்பாட்டம் செய்தனர். இதனால், தலைமறைவான தயாசங்கர் மீது வழக்கு பதிவாகி அவர் பிஹாரில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார். இவரது செயலுக்காக தயாசங்கரின் மனைவியான சுவாதிசிங்கை பகுஜன் சமாஜ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். சுவாதியையும் அவரது மகளையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாயாவதியின் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதனால், பாஜகவும் வேறுவழியின்றி தயாசங்கரை கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கியிருந்தது. மேலும் தொடர்ந்த பிரச்சனையை சமாளிக்க சுவாதிசிங், பாஜகவின் உபி மகளிர் பிரிவின் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதில் அவர் செய்த பணியின் காரணமாக அவருக்கு உபியில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பளித்தது. லக்னோ மாவட்டத்தின் சரோஜினி நகர் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்ட ஸ்வாதிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இவர், முலாயம்சிங்கின் சகோதரி மகனான அனுராக் யாதவை தோற்கடித்துள்ளார். இதனால், அவரது வெற்றிக்கு மறுநாள் பாஜக தயாசங்கர் மீதான கட்சி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதை பாஜகவின் செய்தி தொடர்பாளரான ஹரீஷ் சந்திர ஸ்ரீவாத்சவா நேற்று அறிவித்தார். ஆனால், அதற்கானக் காரணம் கூறப்படவில்லை

SCROLL FOR NEXT