இந்தியா

ஆந்திரத்தை நெருங்குகிறது ‘ஹுத்ஹுத்’ புயல்: தயார் நிலையில் கடற்படை, பேரிடர் மீட்புப் படை

என்.மகேஷ் குமார்

வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஹுத்ஹுத் புயல் அதிவேகமாக கடலோர ஆந்திராவை நெருங்கி வருகிறது. புயல் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மத்திய கடற்படை, பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலோர ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ‘ஹுத்ஹுத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை மதியம் விசாகப்பட்டினம்- ஒடிஸா மாநிலம் கோபாலபூர் இடையே கரையைக் கடக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மைய அதிகாரி சர்மா நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஹுத்ஹுத் புயல் தற்போது விசாகப்பட்டினத்துக்கு 500 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ஞாயிற்றுக் கிழமை மதியம் விசாகப்பட்டினம் -கோபாலபூர் இடையே கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமை மதியத்திலிருந்தே கடலோர ஆந்திரம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களிலும், சென்னை, ஒடிஸா ஆகிய பகுதிகளிலும் அதிக அளவு மழை பொழியும்.

இதில் குறிப்பாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய் யும். மணிக்கு 130-160 கி.மீ வேகத் தில் பலமான காற்று வீசும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். விசாகப் பட்டினம், காகுளம், விஜய நகரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சர்மா தெரிவித்தார்.

ஹுத்ஹுத் புயல் காரணமாக ஆந்திர அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. கடலோரத்திலுள்ள விசாகப் பட்டினம், விஜய நகரம், காகுளம் மாவட்டங்களில் 4 பட்டாலியன் மத்திய ராணுவ படை, 162 மீட்பு படகுகள், 27 பேரிடர் மீட்பு குழு, கடற்படை சார்பில் 30 படகுகள், 8 ஹெலிகாப்டர்கள், 2 விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

மழை தொடங்கியது

நேற்று மதியம் முதல் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புயல் காரணமாக விசாகப் பட்டினம், ஸ்ரீகாகுளம் கடலோர பகுதிகளில் நேற்று சுமார் 2 முதல் 4 மீட்டர் உயரம் வரை அலைகளின் சீற்றம் காணப்பட்டது. கடலோர ஆந்திராவில் தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா முதல்வர்களுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT