திகார் சிறையின் சிறப்பு செல்லில் தங்கியிருந்த சிறைக்கைதிகள் 11 பேர், அங்கிருந்து வெளியேறுவதற்காக தங்கள் தலையை சிறை சுவரில் மோதியதால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து சிறைத்துறை தலைவர் சுதிர் யாதவ் 'தி இந்து'விடம் பேசும்போது, ''காயமடைந்த 11 கைதிகளும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அதில் ஒரு கைதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் காவலரை அழைத்து, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். உடனே காவலரும் மற்ற அதிகாரியும் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு வந்தனர்.
அதே நேரத்தில் மற்ற கைதிகள், தங்களுக்கும் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், தாங்களும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று கூறினர். பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக அனைவரையும் அழைத்துச் செல்ல முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே தங்களின் தலையை அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்ட அனைத்துக் கைதிகளும் காயமடைந்தனர்.
உடனே 11 கைதிகளும் அருகில் இருந்த தீன தயாள் உபாத்யாய மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் திகார் சிறையில் 3-ம் எண் செல்லில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
காயமடைந்த கைதிகள் தங்கியிருந்த சிறப்பு செல், சிறையில் அடைக்கும்போது வன்முறை மற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது'' என்று கூறினார்.