ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் விசித்திரங்களில் ஒன்றாக ஒரு பக்கம் வெற்றிடமான ரூ.500 நோட்டு ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் விவசாயி ஒருவர் வங்கியில் இருந்து எடுத்த மூன்று ரூ.2000 நோட்டுகளில் காந்தியின் உருவம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் அதே மாநிலத்தில் மற்றொரு சம்பவமாக, ஒரு பக்கம் வெற்றிடமாக இருக்கும் இரண்டு ரூ.500 நோட்டுகள் ஒருவருக்கு ஏடிஎம்-ல் இருந்து வந்துள்ளது.
கார்கோன் மாவட்டம், செகாவோன் என்ற கிராமத்தில் பொதுத்துறை வங்கி ஒன்றின் ஏடிஎம் உள்ளது. இதிலிருந்து ஹேமந்த் சோனி என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வங்கி அட்டையை பயன்படுத்தி ரூ.1500 பணம் எடுத்தார். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அவருக்கு மூன்று ரூ.500 நோட்டுகள் வந்தன. இவற்றில் இரண்டு நோட்டுகளில் ஒரு பக்கம் வெற்றிடமாக இருந்தது.
இது தொடர்பாக ஹேமந்த் சோனி சம்பந்தப்பட்ட வங்கியில் புதனன்று புகார் செய்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அந்த நோட்டுகளை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுகளை அவரிடம் கொடுத்தனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரூபாய் நோட்டுகள் அச்சிடும்போது, இத்தவறு நேர்ந்துள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த நோட்டுகளை உடனே மாற்றித் தருகிறோம். தற்போது பணத்தை ஒரு முறை சோதித்த பிறகே ஏடிஎம்-ல் வைக்கிறோம்” என்றார்.