வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இணைந்தது. பிஹாரில் லோக் ஜனசக்திக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜக- லோக் ஜனசக்தி இடை யேயான கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 14-ம் தேதியே தொடங்கியது. பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை பாஸ்வான் கடந்த வியாழக்கிழமை சந்தித்து, கூட்டணியை இறுதி செய்தார்.
12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாஸ்வானுக்கு பிஹாரில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ராஜ்நாத்சிங் கூறுகையில், ’இக் கூட்டணி இரு வருக்கும் நன்மை அளிக்கும் என நம்புகிறேன். பிஹார் மட்டுமன்றி நாடுமுழுவுதும் தேசிய ஜனநாயக முன்னணியை வலுப்படுத்து வோம்” என்றார்.
பாஜக கூட்டணியில் பாஸ்வான் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் கட்சியைச் சேர்ந்த ஒரே முஸ்லிம் எம்.எல்.ஏ. சையத் ஜாகிர் உசைன் கான் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகி யுள்ளார். இது குறித்து ஜாகீர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “மத நல்லிணக்கம், சமூக சமஉரிமை மற்றும் தலித் உயர்வு பற்றி பேசும் பாஸ்வான் மதவாதக் கட்சியான பாஜகவிடம் சேர்ந்துள்ளார். இது போன்ற சந்தர்ப்பவாதிகளுடன் ஒரு நிமிடமும் தங்கி இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்பதால் ராஜி னாமா செய்து விட்டேன்.’ என்றார்.
பாஜக-பாஸ்வான் கூட்டணியை ஐக்கிய ஜனதா தலைவரும், பிஹார் முதல்வருமான நிதீஷ்குமார் விமர் சித்துள்ளார். “இந்த இரு கட்சிகளும் அரசியல் கொள்கை இல்லாதவை. சூழலுக்கேற்ப எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பார்கள்: எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து பாஸ்வான் போட்டியிட் டார். 3 தொகுதிகளில் போட்டியிட்ட அவரின் கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. எனினும், 5 சதவீத வாக்குள் பாஸ்வானுக்குக் கிடைத்தன.
வரும் 5-ம் தேதி முசாபர்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடியுடன் இணைந்து பாஸ்வான் பங்கேற்கவுள்ளார்.