இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவையில் கடும் அமளி: வருவாய் துறை அமைச்சர் மீது ஷூ வீச்சு - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பஞ்சாப் சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் மீது ஷூ வீசப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பிரகாஷ் சிங் பாதல் பொறுப்பு வகிக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டுவிட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.

அதை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் ‘தூங்கும்’ போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில், பக்ரீத் பெருநாள் விடுமுறை முடிந்து மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. அப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் முழக்கமிட்டனர். பதிலுக்கு ஆளும் அகாலி தளம் - பாஜக எம்எல்ஏ.க் கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.

தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கண்டனக் குரல் எழுப்பினர். மேலும் கையில் வைத்திருத்த கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை அடங்கிய தாள்களை சபாநாயகர் மீது வீசினர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து சபாநாயகரைப் பாதுகாத்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஒரு கட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா மீது திடீரென ஷூ வீசப் பட்டது. எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் வரிசையில் இருந்து பறந்து வந்த ஷூ அமைச்சர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் சென்று விழுந்தது. இதனால் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உட்பட ஆளுங்கட்சியினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும், காங்கிரஸ் உறுப் பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி இருந்தனர். அவையில் அமளி நீடித்ததால், கேள்வி நேரத்தை 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் கேள்வி நேரம், பூஜ்ய நேரத்தை சபாநாயகர் ரத்து செய்தார்.

இதற்கிடையில் அந்த ஷூவை காங்கிரஸ் எம்எல்ஏ தர்லோச்சன் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT