ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.பானுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் 20.7.1955-ல் பிறந்தவர் பானுமதி. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1981-ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.
1988-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றியபோது பிரேமானந்தா சாமியாருக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனை இன்றளவும் தமிழக மக்கள் மத்தியில் நினைவு கூரப்படுகிறது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.பானுமதி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான வழக்குகளை விசாரித்து, பல முக்கியமான தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். இதையடுத்து நீதிபதி பானுமதிக்கு பிரிவு உபசாரம் மற்றும் பாராட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் நடக்கிறது.