டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரும் ஆம் ஆத்மி, இறுதி முடிவை எடுப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ட்விட்டரில் பதிந்த கருத்தில், "துணை நிலை ஆளுநர் இன்றே அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்யக் கோருகிறோம். இன்று மாலையே இறுதி முடிவை எடுத்து, நீதிமன்றத்திடம் நாளை முடிவைத் தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2013 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 32 இடங்களிலும் ஆம் ஆத்மி 28 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திடீர் திருப்பமாக ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வரானார்.
ஆனால், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் 49 நாள் ஆட்சிக்குப் பிறகு அர்விந்த் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பிப்ரவரி முதல் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மறுதேர்தல் நடத்தாததை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த செப்டம்பர் 5-ல் பரிந்துரை செய்தார். இதற்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் பிரணாப், நஜீப் ஜங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் எனக் குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததை எதிர்க்கும் வகையில் அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியபோது, "டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கும் முடிவை துணைநிலை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக குதிரை பேரம் செய்ய பாஜக முயற்சிக்கும். இது போன்ற அரசு டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை என்ன?" எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸின் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷகீல் அகமது கூறியபோது, "டெல்லியில் தேர்தல் அறிவிக்காமல் குதிரை பேரம் செய்ய வழி வகுக்கும் வகையில் ஐந்து மாதங்கள் காலம் தாழ்த்தி பாஜகவுக்கு விடுக்கும் அழைப்பு தவறானது. துணைநிலை ஆளுநர், தம் எஜமானர்களான மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினரின் உத்தரவுக்கு இணங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார்.