இந்தியா

இமாச்சல் முதல்வர் மனைவியிடம் விசாரணை

பிடிஐ

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மனைவி பிரதிபா சிங்கிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2009-11-ம் ஆண்டில் வீரபத்ர சிங் மத்திய அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6 கோடி அளவில் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

வீரபத்ர சிங் கணக்கில் வராத வருமானத்தை தனது பெயரிலும், மனைவி மற்றும் குடும்ப உறுப் பினர்கள் பெயர்களிலும் எல்ஐசி பாலிசியில் முதலீடு செய்திருப்ப தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுகான் மற்றும் சிஎல் சவுகான் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராக பிரதிபா சிங் இரண்டு முறை அவகாசம் கோரியிருந்தார். வரும் 24-ம் தேதி வரை தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அப்போது அவரைக் கைது செய்யும் எண்ணமில்லை என அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான பிரதிபா சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT