தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து அசோக சக்கர வடிவில் மனித சங்கிலி அமைத்தனர்.
நாடு முழுவதும் 7-வது தேசிய வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காகுளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய அளவில் அசோகச் சக்கர வடிவிலான மனித சங்கிலியை உருவாக்கி சாதனை படைத்தனர்.
5,571 மாணவர்கள் சேர்ந்து 5 நிமிடத்தில் அசோகச் சக்கர வடிவை ஏற்படுத்தினர். இவர்கள் 42 நிமிடம் வரை நிலைத்து நின்று வாக்குரிமை குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியை ‘வொண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ என்ற சாதனைப் புத்தகம் பதிவு செய்துகொண்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகாகுளம் மாவட்ட தலைமை நீதிபதி நிர்மலா கீதாம்பா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி நரசிம்மம், இணை ஆட்சியர் சக்ரதர பாபு ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.