இந்தியா

தனி மாநிலம் கிடைக்கும் வரை போராட்டம்: கூர்க்காலாந்து தலைவர் எச்சரிக்கை - மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி

பிடிஐ

கூர்க்காலாந்து தனி மாநிலம் கிடைக் கும் வரை போராட்டம் ஓயாது என்று கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) தலைவர் பிமல் குருங் எச்சரித்துள்ளார்.

டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக (கூர்க்காலாந்து) அறிவிக்க வேண்டும் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக டார்ஜிலிங்கில் ஜிஜேஎம் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்போது, நிகழ்ந்த வன்முறையில் போலீஸ் மற்றும் அரசு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து, ஜிஜேஎம் சார்பில் நேற்று முன்தினம் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேநேரம் வன்முறை பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ராணுவம் மற்றும் துணை ராணுவ (சிஆர்பிஎப்) வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு நேற்று இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில் ஜிஜேம் தலை வர் பிமல் குருங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “போராட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். வன்முறைப் போராட்டம் அல்லது முழு அடைப்பை நாங்கள் விரும்பவில்லை. எனினும் திரிணமூல் காங்கிரஸ் அரசு நெருப்புடன் விளையாட விரும்பினால் அதற்காக வருத்தப்பட வேண்டியிருக்கும். கூர்க்காலாந்து தனி மாநிலம் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியிலான எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.

SCROLL FOR NEXT