முஸ்லிம் பெண்கள் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மவுனம் காப்பது ஏன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 91-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இக்கருத்தை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
அண்மைக்காலமாக நாட்டில் ஒரு பிரச்சினை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில அரசியல் கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் காக்கின்றன. இது எனக்கு மகாபாரத காட்சியை நினைவுபடுத்துகிறது.
மகாபாரதத்தில் நிறைந்த சபையில் திரவுபதி துகில் உரியப்பட்டபோது நிலவிய மவுனமும், அதற்கு திரவுபதி அவையினரைப் பார்த்து 'இதற்கு யார் காரணம்?' என்று எழுப்பிய கேள்வியும்தான் நினைவுக்கு வருகிறது. திரவுபதியின் கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை. அத்தருணத்தில் விதுரன், "இந்தக் குற்றத்தை இழைத்தவர்களே இதற்கு முழுப்பொறுப்பு. அதேஅளவுக்கு அமைதி காத்தவர்களும் பொறுப்பு" என்றார்.
விதுரன் கூற்றின்படி ஒப்பீடு செய்தால், முத்தலாக் முறை குறித்து மவுனம் காக்கும் அரசியல்வாதிகள் அந்த முறையை ஊக்குவிப்பவர்கள், பின்பற்றுபவர்களுக்கு நிகரானவர்களே. முஸ்லிம்கள் பின்பற்றும் முத்தலாக் விவகாரமும் மகாபாரதத்தில் திரவுபதி துகில் உரியப்பட்ட சம்பவமும் இணையானதே.
இவ்வாறு அவர் பேசினார்.
முஸ்லிம்கள் முத்தலாக் முறையை கைவிட வேண்டும். பொதுசிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.