பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்நாட்டுப் பாதுகாப்பில் எந்தவித சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்ற விழாவில் அவர் பேசியதாவது:
''நாட்டின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த சில மாதங்களாக எல்லையில் பாகிஸ்தானின் ஊடுருவல் அதிகரித்தது. நமது ராணுவத்தின் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடவடிக்கைக்குப் பின்னர் தீவிரவாத ஊடுருவல் குறைந்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் மூன்றுவித பாதுகாப்பு வளையங்கள் இருக்க வேண்டும். எல்லைப் பாதுகாப்புப் படையுடன் உளவுத் துறையும், போலீஸாரும் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எதிரிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களை வீரர்களோ, அதிகாரிகளோ அதனை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டாம். நாட்டில் நலன் கருதி இத்தகைய செயல்களைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
கடந்த மே 21-ம் தேதி முதல் காஷ்மீரின் பூஞ்ச், ராம்பூர், டிரால் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை, இந்திய ராணுவம் விரட்டி அடித்ததோடு, பலரை சுட்டுக் கொன்றது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ராஜ்நாத் சிங், 'கடந்த சில மாதங்களாக ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டுதலுக்குரியது' என்றார்.