மகாராஷ்டிரம் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது உ.பி.யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மகாத்மா காந்தி கொலைக்கு காரணம் என கடந்த 6-ம் தேதி மகாராஷ்டிராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் கேத்ரி மாவட்டத்தில், சனு சுக்லா என்ற வழக்கறிஞர், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ராகுல் காந்தி தொடர்புபடுத்தி பேசியதை கண்டித்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சனு சுக்லா அவரது மனுவில், புலனாய்வு நிறுவனங்களும், கபூர் கமிஷனும் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் கருத்து வேதனை அளிப்பதோடு, உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாகவும், சங் பரிவார் அமைப்பின் மரியாதைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.