ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாபஸ் பெற்றார்.
இதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி அளித்தது.
எனினும், இது தொடர்பாக எந்த நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் விளக்கம் கேட்டபோது நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “எங்கு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் ஏன் கூற வேண்டும். நீங்கள் எங்கு விரும்புகிறீர்களோ அங்கு செல்லுங்கள். இது உச்ச நீதிமன்றத்தின் வேலை கிடையாது” என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அடுத்த நாளே, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதில், “சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கவும் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அமலாக்கத் துறை முறையாக மேல் முறையீடு செய்யும்” என்று கூறியிருந்தார்.
அப்போது, சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, “2ஜி வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வந்தால்தான் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அதுவரை இடைக்கால உத்தரவுக்காக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. அதன் அடிப்படையில்தான் அணுகினேன்” என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியது இறுதித் தீர்ப்புதான் என்று கூறி வழக்கை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதன்படி நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை வாபஸ் பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.