இந்தியா

நவீன் தலைமையில் மூன்றாவது அணி - இடதுசாரிகள் வலியுறுத்துவதாக பி. ஜே. டி தகவல்

செய்திப்பிரிவு

மூன்றாவது அணிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை வகிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளதாக பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநில வருவாய்த் துறை அமைச்சர் சூர்ய நாராயண் பத்ரா கூறுகையில், “2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணிக்கு நவீன் பட்நாயக் தலைமை வகிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன” என்றார்.

நவீன் பட்நாயக்கை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவீர்களா எனக் கேட்டபோது, “மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு அது குறித்து முடிவு எடுக்கப்படும். உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம்” என்றார்.

சமீபத்தில் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசிய இந்திய கம்யூ னிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், மூன்றாவது அணிக்கு நவீன் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியும் இதே கோரிக்கையை ஏற்கெனவே விடுத்திருந்தார்.

பிஜு ஜனதா தளத் துணைத் தலைவரும், மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான தாமோதர் ரவுத் கூறுகையில், “யாரை பிரதமராக்குவது என்பதை மூன்றாவது அணியில் இணைந்து செயல்படவுள்ள கட்சிகள்தான் முடிவு செய்யும். ஆனால், நவீன் பட்நாயக்கை விட பொருத்தமானவர் வேறு எவரும் தேசிய அளவில் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT