பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தினுள் வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த கும்பல் ஒன்று ஜே.என்.யூ. மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
அதாவது தேச-விரோத சக்திகளுடன் இவர்கள் இணைந்ததாகக் கூறி இந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர். இவையெல்லாம் வலுவான போலீஸ் பாதுகாப்புகளுக்கிடையே நடந்துள்ளது.
பாட்டியாலா கோர்ட்டில் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமாரை ஆஜர்படுத்த அழைத்து வருவதையொட்டி அவருக்கு ஆதரவாக ஜே.என்.யூ. மாணவர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கு இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிருபரையும் தாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்துறை செயலர் ராஜிவ் மெரிஷி கூறும்போது, “சட்டம் அதன் கடமையைச் செய்யும்; யார் அத்துமீறி நடந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும்” என்றார்.
தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க கோரிக்கை:
வழக்கறிஞர்கள் போல் வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவருக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் தேச விரோத வழக்கு ஆகியவை குறித்து தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று மனு செய்யப்பட்டது.
இது நீதிபதிகள் பி.டி.அகமது, ஆர்.கே.கவுபா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்விடம் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள் மீதான நீதி விசாரணையும் கோரப்பட்டுள்ளது.
ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவரால் செய்யப்பட்ட இந்த மனுவில், டெல்லி போலீஸார் இந்த விசாரணையை முறையாக நடத்தவில்லை. எனவே, தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மீதான விசாரணை நாளை (செவ்வாய்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, “டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர், இப்போது என்ன அவசரம்? நாளைக்கு விசாரிக்கலாம்” என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
பாட்டியாலா கோர்ட் வாசலில் நபரை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ:
பாட்டியாலா கோர்ட் வாசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ-வான ஓ.பி.சர்மா அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமாரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் அங்கு குழுமி கோஷத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ‘நாட்டுக்கு எதிராக’ கோஷமிட்டதாகக் கூறி நபர் ஒருவரை அடித்து உதைத்தார் பாஜக-வின் ஓ.பி.சர்மா என்ற எம்.எல்.ஏ.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. சர்மா, “இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் அடி உதைதான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ஒரு நபரை நாங்கள் பிடிக்க முயன்றோம், ஆனால் நாங்கள் அவரை அடிக்கவில்லை” என்றார்.
ஆனால், அவர் ஒரு நபரை அடித்ததை பலரும் பார்த்ததாகவே ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.