பிரதமர் நரேந்திர மோடி செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானத்தில் இருந்து கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். அவரது அமெரிக்க பயணத்திற்காக இரண்டு ஏர் இந்தியா ஜம்போ விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று விமானத்தில் இருந்து செயலிழக்கப்பட்ட நிலையில் கையெறி குண்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மாற்று விமானம் (747-400) சனிக்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு மும்பை - ஹைதராபாத்- ஜெத்தா மார்க்கத்தில் இயக்கப்பட்டது. ஜெத்தா விமான நிலையத்தில் பயணிகள் இறங்கிய பின்னர் விமான சிப்பந்திகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, செயலிழக்கப்பட்ட நிலையில் இருந்த கையெறி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஜெத்தா விமான நிலைய பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னர் விரைவில் விமானம் கேலிகட் வந்தடையும் என தெரிகிறது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: "விமானத்தில் சந்தேகத்துக்குரிய மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.