இந்தியா

காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடிக்கணக்கில் முறைகேடு: கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது மாநில இந்து சமய அறநிலையத் துறையின் தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது.

பஞ்சபூத தலங்களில் வாயுதலமாக விளங்குகிறது காளஹஸ்தி. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை செய்து வருகின்றனர். இத்தகைய பூஜைகள் மூலமாகத்தான் இக்கோயிலுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

ராகு-கேது பூஜைகளில் தேவஸ்தானம் சார்பில் வெள்ளி ராகு-கேது படுகைகள் மற்றும் இதர பூஜை பொருட்கள் வழங்கப்படு கின்றன. பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் வெள்ளிப் படுகைகளை கோவில் உண்டியலில் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தி வரு கின்றனர். இதன்படி பக்தர்களுக்கு வழங்கும் வெள்ளிப் படுகைகள் வாங்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. முறைப்படி டெண்டர் மூலம் தரமான வெள்ளிப் படுகைகளை வாங்காமல், தரமற்ற வெள்ளிப் படுகைகளை அதிக விலைக்கு நேரடியாக நகைக் கடைகாரர்களிடம் வாங்கியது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு பக்தர்களுக்கு வழங்கும் டிக்கெட் சுழற்சி முறையில் மீண்டும் பக்தர்களுக்கே வழங்கி லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பக்தர்களின் சரமாரி புகார்களுக்குப் பின்னர் நேரடி யாக ஆந்திர மாநில இந்துசமய அறநிலையத் துறையினர் கடந்த வாரம் காளஹஸ்தி கோயிலில் இருந்து அதிரடியாக முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஒரு மினி பஸ்சில் ஹைதராபாத்திற்கு கொண்டுசென்றனர்.

அங்கு சுமார் 20 அதிகாரிகள் ஒரு வாரமாக இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் சம்பந்தப் பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என மாநில இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் முக்தேஷ்வர் ராவ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி வருமானம் உள்ள புகழ்பெற்ற இக்கோவிலில் தங்கும் அறைகள் ஒதுக்குவது, சேவை டிக்கெட்டுகள், டோக்கன் வழங்காமல் பிரசாதம் விநியோகிப்பது, தேவஸ்தான இடத்தில் உள்ள கடைகளுக்கான வாடகை வசூலிப்பது உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதும் தணிக்கை யில் தெரியவந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக விரைவில் விசா ரணை தொடங்கும் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT