நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ள நிலையில், அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதன்கிழமை காலை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் கூட்டத்தில், 'பாட்னா குண்டுவெடிப்பு, பாஜக தலைவர்களை தீர்த்துக் கட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி' என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் பாதுகாப்புக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்கும் என நம்புகிறோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "மோடிக்கு உள்ள அச்சுறுத்தலை உணர்ந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம். மோடிக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தை அரசியலாக்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு எதிராக மென்மையான போக்கை மத்திய அரசு கடைப்பிடிக்கக் கூடாது. மோடி பங்கேற்கும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்" என்றார்.
எந்த வகையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பாஜக கோருகிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “என்ன செய்ய வேண்டும் என்பது மத்திய அரசுக்குத் தெரியும்” என்றார் ஜவடேகர். பிரதமருக்கு இணையான பாதுகாப்பை மோடிக்கு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறுகையில், "மோடிக்கு இப்போது தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிரதமர், முன்னாள் பிரதமர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமானால், அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்" என்றார்.
முன்னதாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சமீபத்தில் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.