இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலி - 3 லட்சம் பேர் பாதிப்பு; 8,000 பேர் வீடிழப்பு

ஐஏஎன்எஸ், பிடிஐ

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த இருவாரங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 9 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 1-ம் தேதியிலிருந்து பருவமழை தீவிரமடைந்துள்ளது. மொத்த முள்ள 51 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8,000 பேரின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவர்கள் 27 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் 2,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

33 மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பொழிந்துள்ளது. 14 மாவட்டங்களில் சராசரியாகவும், 4 மாவட்டங்களில் சராசரியை விடக் குறைவாகவும் மழை பொழிந்துள்ளது.

தலைநகர் போபாலில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள னர். இங்கு வெள்ளத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர். பன்னா, ஜபல்பூர் மாவட்டங்களில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரேவா மாவட்டத்தில் தம்ஸா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 5 இளைஞர்கள் உட்பட 9 பேர் காணாமல் போய்விட்டனர்.

உத்தராகண்டில் கனமழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். கனமழை காரணமாக அனைத்து ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தால் தடைபட்டுள்ளன.

கனமழை காரணமாக, கார் தடுமாறி 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். நந்தகான் பகுதியில் மரம் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். உத்தம்சிங் நகர், ஹரித்வார், டேராடூன் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங்களில் மழையால் வீடுகள் இடிந்துள்ளன.

ரூர்கி பகுதியில் 318 மி.மீ மழை பதிவாகியுள்ளது. லக்ஸரில் 150 மி.மீ, ஹரித்துவார் 101.8 மி.மீ., அல்மோரா 103.2, டேராடூன் 74.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ரத்மா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பதேதி கிராமத்தில் கால்நடைகளும் குடிசைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT