ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 39 ஆனது. மேலும் 50 ஆயிரம் நாளிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி கடந்த வாரம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல் லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையும் மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
குப்வாரா மாவட்டம் ஹத் முல்லா பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது ஒரு கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். இதன்மூலம் இந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித் துள்ளது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1,500 பேர் உட்பட, 3,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாளிதழ்கள் பறிமுதல்
போராட்டக்காரர்களை ஊக்கு விக்கும் வகையில் செய்தி வெளியிடுவதாகக் கூறி, கிரேட்டர் காஷ்மீர் பகுதியில் ஒரு நாளிதழின் அச்சகத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்திய போலீஸார் 50 ஆயிரம் பிரதிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜிகேசி அச்சகத்தை போலீஸார் மூடினர். ஊழியர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் கேபிள் டிவி சேவையும் பாதிக்கப் பட்டுள்ளன.
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி நேற்று ஜம்மு வில் கூறும்போது, “பூஞ்ச் மாவட்டம், சஜியான் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ வீர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆயுதம் தாங்கிய சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை கண்டனர். அவர்களை சரண் அடையுமாறு ராணுவ வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் இதை பொருட்படுத்தாமல் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது” என்றார்.