மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், தங்கள் கட்சித்தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர்களான ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஜெகத் பிரகாஷ் நாடா ஆகியோர் உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் `தி இந்து'விடம் கூறுகையில், "அரசியல்வாதி களைக் கடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் திட்ட மிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செய்தி பாஜகவை மிகவும் கவலை அடைய வைத்துள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், மத்திய அரசு அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்" என்றார்.
இதற்கு முன்பும் பாஜக தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், மீண்டும் அதுபோன்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் அரசு எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என அமைச்சரிடம் கேள்வி எழுப்பி உள்ளதாகவும் நிர்மலா தெரிவித்தார்.
இதற்கிடையே, பாஜக தலைவர்களுக்கு ஆபத்து என உளவுத்துறையின் பெயரில் வெளியாகி உள்ள செய்தியை சுஷீல் குமார் ஷிண்டே மறுத்திருக்கிறார். மோடிக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.