டெல்லியில் ரிசர்வ் வங்கி கவர்னரை தமிழக விவசாயிகள் இன்று சந்திக்க முயன்றனர். இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் அனைவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று காவலில் வைக்கப்பட்டனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக மற்றும் மாணவர்கள் அமைப்புகளின் ஆதரவும் இதற்கு கிடைத்து வருகிறது. இவர்களுடன், தமிழகத்தின் மற்ற விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இன்று அதன் 25 ஆவது நாளை முன்னிட்டு 25 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். பிரதமர் நரேந்தர மோடியின் முகமூடியை ஒருவருக்கு அணிய வைத்து அமர வைத்தனர். அவரை பிரதமர் மோடியாகக் கற்பனை செய்து ‘மோடிஜி! மோடிஜி! ஜந்தர் மந்தர் ஆவோஜி!( மோடியாரே! மோடியாரே! ஜந்தர் மந்தர் வருவீரே!)’ எனக் கோஷமிட்டனர். மோடியை போல் அமர வைத்தவரது கால்களில், ஐந்து தமிழக விவசாயிகள் தங்கள் கைகளில் கீறி ரத்தத்திலான பொட்டுக்களை வைத்தனர்.
இந்நிலையில், ஜந்தர் மந்தருக்கு அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் முன்பு திடீர் என மாலையில் விவசாயிகள் கூடினர். அதன் கவர்னர் உர்ஜித் பட்டேலை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். இதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய படையினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால், தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால், ரிசர்வ் வங்கி முன்அனுமதியின்றி கூடியதாக விவசாயிகள் அனைவரையும் பலவந்தமாக போலீஸார் தம் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதில், பாதி பேர்களை மீண்டும் ஜந்தர் மந்தரில் கொண்டு போய் விட்டனர். அய்யாகண்ணு உட்பட மீதியுள்ளவர்களை மந்திர் மார்க் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் எச்சரிக்கப்பட்டு தமிழகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவிக்கவே சில நிபந்தனைகளுடன் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்..
இது குறித்து ‘தி இந்து’விடம் அய்யாகண்ணு கூறுகையில், ‘விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு எதிராக பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலை சந்தித்து விளக்கம் கேட்க சென்றோம். அனுமதி பெறாமல் வந்ததாக மறுத்தவர்கள் எங்களை பலவந்தமாக துன்புறுத்தி காவல் நிலையம் கொண்டு சென்று விட்டனர். அவர்களிடம் மீண்டும் கவர்னரை சந்திக்க போலீஸாரிடம் மனு அளித்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக இன்று நண்பகலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் நேரில் வந்து ஆதரவளித்திருந்தார். தற்போது தமிழக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடர்ந்து வருகிறது.