ஜம்முவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான பிரவுன் சுகர் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரஜவுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஃபரூக், ஜாவேத் இக்பால், கேரளாவைச் சேர்ந்த நவாஃப் கான், முகமது அஜ்மல் ரோஷன் ஆகிய நான்கு பேரும் ஜம்மு நகரில் நேற்று கைது செய்யப்பட்டதாக, நகர எஸ்.பி. வினோத் குமார் தெரிவித்தார்.
குவைத்தில் இருந்து மர்ம நபர் ஒருவரின் கட்டளைப்படி, போதைப் பொருளை ஜம்முவில் இருந்து, டெல்லிக்கு கொண்டு சென்று வேறு ஒருவரிடம் ஒப்படைக்க இவர்கள் நான்கு பேரும் திட்டமிட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
நான்கு பேரிடம் இருந்தும் ஏராளமான செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குவைத்தில் இருந்து இவர்களுக்கு கட்டளையிட்டவர் யார், டெல்லியில் போதைப் பொருளை பெற காத்திருந் தவர் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.